மதீப்பீட்டு அதிகாரத்திற்கெதிரான Zero பதிவு - பகுதி I

மதீப்பீட்டு அதிகாரத்திற்கெதிரான Zero பதிவின் முன்னுரை

சிறந்தது நல்லது அருமையானது என்பவையும் அவற்றின் எதிர்பதமும்
தரும் மதீப்பீடு என்ற அதிகாரச் சொல்லின் மீதுள்ள அச்சம் காரணமாக
எதைப்பற்றியும் இறுதி வார்த்தை கூறமுடியாதுள்ளது. என பஹீமா ஜஹானின் தீவில் தனித்தமரம் என்ற கவிதைக்கு பின்னூட்டமிடும் போது கூறியிருந்தேன். அதற்குப் பின் நண்பர் அசரீரி பஹீமாவின் கவிதைக்குப் பின்னூட்டமிட்ட போது "மதீப்பீடு என்பதை அதிகாரத்தின் மொழிக்கு மட்டுமே உரியதானதாக பர்சான் முடிவெடுத்துக் கொண்டதற்கான நியாயம் என்னவென்பதுதான் புரியாமலிருக்கின்றது" என்று எழுதியிருந்தார். பின்னர் பஹீமா இது தொடர்பாக கதைப்பதற்கு எனக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் சொன்னார். மதீப்பீட்டு அதிகாரத்திற்கெதிரான Zero பதிவு எழுதப்பட இந்த விடயங்களே காரணமாகவிருந்தன. இரண்டு நண்பர்களிற்கும் எனதுலகம் நன்றி தெரிவிக்கிறது. இதனுடன் அனைத்து நண்பர்களும் உரையாடமுடியும். தனித்த பிரதிகள் என்றிருப்பின் Email செய்யுங்கள். இல்லாதவிடத்தில் பின்னூட்டமாய் இடுங்கள்.

மதீப்பீட்டு அதிகாரத்திற்கெதிரான Zero பதிவு - பகுதி I

சமூக அதிகாரங்களில் காணப்படும் அமைப்பியல்புகள் மிக அதிகமாக அனைத்து இனக்குழுக்களையும் ஆழும் தன்மை வாய்ந்துள்ளமையை நாம் அவதானிக்கிறோம். டெல்யூஸ் குறிப்பிடும் State philosophy என்கின்ற அரச தத்துவமானது அதிகாரம் கூடியதாகவும் மூடுண்ட அமைப்பு, இயல்புகளைக் கொண்டதாகவும் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. இத் தத்துவத்தின் வீச்சினால்தான் சமூக அதிகாரத்தினை இது தக்கவைத்து தன் இயங்கியலை மேற்கொள்கிறது. இந்த அரச தத்துவமானது தனக்குள்ளே சில நியதிகளையும் பிரமாணங்களையும் விதி ஒழுங்குகளையும் மிக ஆழமாக புதைத்துக் கொண்டுள்ளது. இது ஆழமாகப் போடப்பட்ட இரும்புச் சுவர்களைப் போல் தன் அடித்தளத்தில் மாற்றங்களுக்கு எவ்வித இடமும் கொடுக்காமல் இருக்கும். தன்னை நிலைநிறுத்திக் கொள்ள மதீப்பீட்டு அதிகாரத்தின் படிநிலைகளை நன்றாக வரிந்து கட்டி அதன் பாலான தன் அடியாட்களை வளர்த்து அவர்களை போஷித்தும் வைத்துக் கொள்ளும். எவ்வாறு தீவிரவாதம் கருத்தியலை தன் பங்காளிக்கு அவனை அறியாமலே ஊட்டிவிடுகின்றதோ அதே போலதான் அரச தத்துவமும் காணப்படுகின்றது/ காணப்படும்.

ஆனால் Anti state philosophy என்பது திறந்த அணுகல் முறையாக இருக்கிறது. அனைத்து வகையான நியதிகள், வரைபுகள், பிரமாணங்கள் என்பவற்றினை மறுதலிப்பதே இதன் பிரதான பண்பாட்டாய் காணப்படும். அங்கு இரண்டாவதாய் குறிப்பிடப்பட்ட Anti state philosophy மதீப்பீடு என்கிற அதிகாரத்தின் எல்லைகளை உடைத்து மற்றமைகளின் செயற்பாடுகளிற்கும் அவற்றின் பங்குபற்றுதல்களுக்கும் இடம் கொடுக்க உழைக்கும். இங்குதான் உரையாடல் என்ற பதிவு முன்வைக்கப்படுவதினை நாம் காணலாம். நாம் இன்று காணுகின்ற பல்வேறு விடயதானங்கள் பகுத்தறிவு என்கிற ஆளுகையினால் கட்டமைக்கப்பட்டது. எவ்வளவுதான் பகுத்தறிவின் விளைவுகளை இன்று நாம் எதிர்த்து கூக்குரலிடுகின்ற போதும் அது நம்முன்னே மிகவும் இலாபகமாக இன்றும் உட்கார்ந்து கொண்டிருப்பதினை மறுக்க முடியாது. பகுத்தறிவின் வன்முறை தொடர்பாகவும் அதன் வெறியாட்டத்தினால் ஏற்பட்ட உலக பின்னடைவுகள் பற்றியும் மேற்கிலே பல்வேறு வாதங்களும் கருத்தியல் போராட்டங்களும் இடம் பெற்று களைத்துவிட்டன. தெரிதா, பூக்கோ, தெல்யூஸ் கத்தாரி, விட்கென்ஸ்டெய்ன், பாத்ரிலா, லியோர்தான் ஆகியோரும் இன்னும் பலரும் பகுத்தறிவின் நிஜ முகத்தினை தோலுரித்துக்காட்டினர். என்றாலும் பகுத்தறிவின் ஆழ்கை இன்னமும் நம்மை விட்டும் அகன்று விடவில்லை. ஏனெனில் நமது கடன்வாங்குகின்ற கல்விக் கொள்கை இன்னமும் நமக்காக எதனையும் சிந்திக்கத் தூண்டவில்லைதானே. ஐரோப்பாவின் விழிப்பு காலங்களையும் இரண்டாம் உலக மகா யுத்ததின் தோற்றுவாய் காரணிகளையும் தானே நாம் இன்னமும் வகுப்பறைகளில் கற்கிறோம். மாறாய், ஜப்பானிய கழிவறைத் தொழில் நுட்பத்தின் நுணுக்கங்கள், Micro chip கலன்கள், உலக பங்குச் சந்தையில் அண்மைய விலையேற்றத்தின் பிரதான அரசியல் என்ன?, 2055ம் ஆண்டின் பொதுமைக் கலாசார மற்றும் மொழிப் பண்பாட்டின் எதிர்விளைவுகளை கட்டுப்படுத்தும் சமூகவியல் காரணிகளின் தன்மைகள், நவீன தொழில்நுட்ப போராட்டத்திற்கு முகம் கொடுத்தவாரே நம் மரபினை உயர்த்திப் பிடித்து அதனையும் வாழ வைப்பதற்கான புதிய Programs பற்றியெல்லாம் நாம் சிந்திப்பதே இல்லையே, நமது கல்விக்கொள்கை கதைப்பதே இல்லையே.. இது பகுத்தறிவு, அக்கிரமிப்பு, கல்விச்சந்தை என்பன நமக்களித்தவைகள்.

இவற்றை எவ்வாறு பகுத்தறிவின் வன்முறை விளைவுகளாக நாம் இனங்காண்கிறோமோ அதே போல்தான் மற்றவை மீதான மதீப்பீட்டுத் தன்மைகள் கூட பகுத்தறிவின் விளைவுகளே. நாமும் பகுத்தறிவின் பிள்ளைகளாக வளர்க்கப்பட்டவர்கள் என்ற அம்சமே அனைத்தையும் மதீப்பிட்டே விடயங்களினைத் தீர்மானிக்கும் தனிமையினை நம்முடன் வைத்துள்ளது. ஆனால், இதன் அதிகாரத்தின் வன்முறைகளை இனங்காண்பதென்பது கடும் கஸ்டமாகும். இங்குதான் சிறந்தது நல்லது அருமையானது என்பவைகளை எடுத்தக் காட்ட விளைகிறேன். நண்பரே ஒன்றினைப் பற்றி - சிறந்தது, நல்லது, அருமையானது - இப்படி நாம் கூறுவதற்கு என்ன வகையான அளவுத் திட்டத்தினைக் கொண்டிருக்கிறோம்? இங்கு ஒன்றின் மாற்றமுறும் தன்மைகளை/ ஒன்றின் தளத்தினை/ அதன் வளர்ச்சியினை நாம் மதீப்பீடு என்பதன் ஊடாக கண்டு கொள்கிறோம். ஆனால், இங்கு அதனை மதீப்பிடுகின்ற போது ஏற்படும் புறமொதுக்கங்கள், தூரமாக்கல்கள், மற்றும் அளவு கடந்த புகழ்ச்சிகள், பிம்பமாக்கல்கள், கட்டமைப்புக்கள் இதனால் ஏற்படுகின்ற வன்முறைகள் அதனுடான விளைவுகள் என்பவை பற்றி கணிப்பீட்டு அக்கறை தொலைந்தே விடுகிறதல்லவா? இதைத்தான் பகுத்தறிவு நமக்கு மதீப்பீட்டின் பக்கவிளைவாய் தந்திருக்கின்றது. அதாவது ஒன்றினைப் பற்றிக் குறிப்பிடும் போது அதில் புதைந்து கிடக்கும் இதர துணைக் காரணிகளை நாம் விட்டுவிடுகிறோம். மற்றமைகளை மறுத்தே பகுத்தறிவு மதீப்பீட்டை முன்வைக்கிறது. இந்த நிலைப்பாடு மிகப்பெரிய அதிகார ஆட்டம் இல்லாமல் வேறென்ன?

நாம் மிகச்சிறிய விடயங்களில் இருந்தே இதனை செய்து கொண்டு இருப்பதனால் இதன் தீச்சுவாலை நமக்கு பாதிப்பானதாய்/ வன்முறை கொண்டதாய் உணர முடியாமல் இருக்கலாம். இந்த மதீப்பீட்டு நிலையின் போது நமக்குள்ளே ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்ற முற்கற்பிதங்களே தம் இயங்கியலை செய்கின்றன. குறித்த விடயத்தினை நாம் ஒரு சட்டத்தினூடாகவே பார்க்கப் பழகிவிட்டோம். நண்பரே இதுதான் அதிகாரம் என்கிறேன்.

இங்கு ஒரு பிரதியை எடுத்துக் கொண்டு நோக்குவோம்.

பிரதியாளனின் பிரதிதான் நம்மிடையே வாழும் என நான் நம்புகிறேன். பிரதியாளனின் உள்நோக்கத்தினை ஏன் எடுத்து ஆராய்ந்து உங்கள் மதீப்பீட்டினை தெரிவிக்க வேண்டும். ஆனால் அவனின் பிரதியை பொருளாகக் கருதி அதனுடன் பயணிக்கலாமல்லவா?. பயணத்தில் விருப்பு இருந்தால் தொடர்வது இல்லாவிட்டால் இடையில் இறங்கிவிடுவது. அளிப்புரிமை கிடைத்ததுவாய் பிரதியை ஏன் நுகர்ந்து கொள்ள முடியாது. அது வேறு பயணத்திற்கானதாய் இருப்பினும் தன்பாதை மாற்றத்துடன் நம்முடனும் பயணிக்க முடியுமல்லவா? மதீப்பீட்டினை வைத்துப் (பகுத்தறிவின் அதிகாரத்தினை வைத்துப்) பார்க்கின்ற போது பிரதி பிரதியாளனுக்குள்ளே இருந்து வெளிவர முடியாத இக்கட்டான சூழலில் அகப்பட்டு சிக்கித் தவித்துவிடும். இந்தக் கொலையினை மதீப்பீட்டு அதிகாரமேசெய்கிறது. இவ்வாறான நிலைகளில் பிரதியின் வாழ்க்கை பிறக்கும் போதே முடிந்து விடுவதினை நாம் காணலாம்.

ஆக, மனிதன் பயன்படுத்தும் அனைத்து மதீப்பீட்டு முறைமைகளையும் தர்க்கங்களின் கொள்கைகள், பகுத்தறிவு, கோட்பாடுகள், நிறுவனங்கள் என்பவையே தீர்மானிக்கின்றன. ஏதோவொரு முற்கற்பிதங்களுடன் பிரதியை அணுக எமக்கு என்ன உரிமை இருக்கிறது?. பிரதியின் சுயத்தினை கவர்ந்து சிறைப்படுத்துவது உண்மையான தர்மமா? மீளவும் அந்தப் பிரதிக்கு வெளியில் இருந்தே அறங்கள் விழுமியங்கள் கற்பிக்கின்றனவே தவிர, பிரதியை சுய ஆதாரமாக மாற்றாமல் விடுகின்றமை நியாயமா? இந்த நிலைக்கு பிரதியைத் தள்ளிவிடுகின்ற மதீப்பீட்டின் அதிகாரத்தினைதான் நாம் எதிர்க்கிறோம்.

நீட்ஷே குறிப்பிட்டுச் சென்ற மறு மதிப்பீட்டு முழக்கம் இதுதான் என நினைக்கிறேன் தோழரே. உன் மீதான அனைத்து மதீப்பீடுகளையும் நீ மறுத்து உன்னையே நீ மதீப்பிடு என்றான் நிட்ஷே. ஒவ்வொன்றையும் அதுவே மதீப்பிடட்டும். அதாவது உங்கள் மீது அதிகாரம் செலுத்துவது நீங்கள் மட்டுமே. அதே போல் என் மீதும் என் பிரதிமீதும் மதீப்பீடு செய்வதும் அதிகாரம் கொண்டதும் நான் மட்டுமே. உன்னையும் உன் பிரதிகளையும் மதீப்பீடு செய்ய நான் எந்த உரித்துடையவனும் அல்ல. இந்த வகையில் தான் பகுத்தறிவு ஏற்படுத்திய அனைத்து மதீப்பீடுகளையும் அதன் அதிகாரங்களையம் நாம் கேள்விக்குட்படுத்தி அதனை மறுத்து நிற்கிறோம்.

மேலும் இன்னொன்று, இந்த மதீப்பீட்டிற்கு பிரதான காரணம் நமது அறிதல் முறைகளில் காணப்படுகின்ற விளைவுகளே. ஒருவரில் நாம் உரிமை எடுத்துக் கொள்கிறோம் எனும் போது அவரில் நாம் அதிகாரமுடையவராக மாறுகிறோம் என்பது பொருளல்லவா? அங்கும் ஒவ்வொரு நிகழ்வும் மதீப்பிடவேபடுகிறது. இதுதான் அதிகாரம் என்கிறோம்.

இது பகுதி I தானே நண்பரே, இயலுமானவரை உரையாடுவோம் காத்திருக்கிறேன்.

பர்ஸான்.ஏஆர்.