குழம்பிய கூட்டணிகளும் நமது தெரிவும்


துப்பாக்கி வேட்டுக்கள்
அவன் மார்பையும் முகத்தையும் நொறுக்கின.
தயவு செய்து மேலும் விபரணம் வேண்டாம்
நான் அவனது காயங்களைப் பார்த்தேன்
அதன் பரிமாணங்களைப் பார்த்தேன்.
நான் நமது ஏனைய குழந்தைகள் பற்றி எண்ணுகிறேன்
குழந்தையை இடுப்பில் ஏந்திய
ஒவ்வொரு தாயையும் பற்றி எண்ணுகிறேன்

அன்புள்ள நண்பனே,
அவன் எப்போது வருவான் என்று கேட்காதே
மக்கள் எப்போது கிளர்ந்
தெழுவார்கள்
என்ற மட்டும் கேள்
”.

கவிஞர் மஹ்மூத் தர்விஷின் இந்த வரிகளைத் தான் இன்றைய ஆக்கிரமிப்புத் தேர்தலின் முன் என்னால் கூற முடியுமானதாக இருக்கிறது. மிகவும் சந்தர்ப்பவாதங்கள் நிறைந்து போன தொன்றாய் நமது மாகாணத்திற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதினை நாம் நன்கறிவோம். பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து கிழக்கினை மீட்டு அதன் வெற்றிவிழா கொண்டாட்டங்களினை கொழும்பில் கொண்டாடிய அரசாங்கம் தான் இன்று தேர்தலினை நடாத்துகிறது. சர்வதேசத்தின் கண்களிற்கு ஜனநாயக மீட்பாளர்களாய் தம்மை காட்டிக் கொள்ளவும் இனவாதத்தின் இராட்சத திட்டங்களினை மிகச் சரியாகவும் போர்வைக்குள்ளால் அரங்கேற்றவும் அரசாங்கத்திற்கு இது சிறந்த தளமாக மாறி விட்டது.

ஒரு பக்கம் தமிழ் மக்களின் வரலாற்று நியதிகளினை தூக்கியெறிந்து விட்டும், தமிழர்களின் தாயகக் கோட்பாடினை முற்றாக மறுத்து விட்டு, ஆனால் தமிழ் தீவிரவாதக் குழுவினதும் முஸ்லிம் அடிவருடிகளினதும் ஆதரவுடன் சிங்கள ஆக்கிரமிப்பு அரசாங்கமும், தேர்தல் வியூகம் என்ற அடிப்படையில் முஸ்லிம்களின் சுயநிர்ணய காப்பிற்காய் ஐ.தே. கட்சி யுடன் இணைந்து கொண்டு SLMCயும் தேர்தல் களங்களில் நிற்கிறது.

தமிழர் போராட்டத்தின் தவறிவிட்ட பிரதான இலக்குகளினதும் வங்குரோத்து அரசியல் சிந்தனையின் பிரதிபலனினையும் இன்று ஈழப் போரியல் வரலாறு பதிந்து விட்டது. மிக குறுகிய வரலாற்றுப் பாடமாக முன்னெடுக்கப்பட்ட தமிழர் விடுதலைக்கான போராட்டம் அனைத்து வகை முன்னனி தலைமைகளினையும் தீர்த்துக் கட்டிய பாசிச போராட்டமாகவே தன்னை இனங்காட்டியதினை உலகம் நன்கறியும். சிங்கள இனவாதத்தின் முகத்திற்கு கரிபூசி அதன் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த உருவம் பெற்ற தமிழர் விடுதலைப் போராட்டத்தின் வன்முறை இதர தேசங்களினை காவு கொண்டதினை மறந்து விடலாகாது. நீண்ட நெடிய நிலப் பிரதேசத்தினை தன் முழு ஆளுகையின் கீழே வைத்திருந்த இயக்கத்தின் வரலாற்றுத் தவறுகள் எவ்வாறு அச்சத்தினையும், இழப்பினையும் தவிர எதிர்காலம் பற்றி எந்தவித நம்பிக்கையினையும் தரவில்லையோ அதே போல சிங்கள ஆக்கிரமிப்பிற்கான முகவர்களினையும் கூடவே அறிமுகப்படுத்தித்தந்திருக்கிறது.

புலிகளிடமிருந்து கருணா அம்மான் விலகி தனித்து இயங்க முற்பட்ட போது பிரான்சில் உள்ள எனது தமிழ் நண்பரொருவர் தெலைபேசியில் கூறிய வார்த்தைகள் இன்று சுக்கு நூறாய் உடைந்து போய்விட்டது. தோழரே கிழக்கின் போரியல் ஈழப் போராட்டம் செய்த மகா தவறுகளை விட்டும் கிழக்குத் தமிழர்கள் தப்பித்துக் கொள்ள இது சிறந்த வழி. ஆனால் சுதந்திரமான கிழக்கினையே நாம் விரும்பு கிறோம். இன்னொரு டக்லஸ் தேவானந்தா வையோ வரதராஜப் பெருமாளினையோ அல்லஎன்றார். புலிகளிடமிருந்து கருணா அம்மானின் விலகலினை எனது நண்பர் இவ்வாறான திருப்தி தரும் அர்த்தப்படுத்தலின் பின்னனியிலேதான் பார்த்தார். அதனை ஏற்றுக் கொண்டு நண்பரே அரச அதிகாரம் மிகப் பொல்லாதது. முஸ்லிம் சமூகம் அதற்குள்ளே சிக்கி விட்டது. நீங்களாவது பார்த்து நடந்து கொள்ளுங்கள்என்றேன். அன்று நாங்கள் கதைத்துக் கொண்டது போலவே இன்று அரச அதிகாரம் கிழக்கு தமிழ் மக்கள் உட்பட சுதந்திர வாழ்வினை வேண்டிய அனைவரதும் உன்னத எதிர்பார்ப்புக்ளை நெறுக்கி விட்டது. மீளவும் தீவிரவாதத்தின் கோர முகங்களினை தமிழ் சமூகம் சந்திப்பது தான் விதி என்ற நிலைப்பாட்டினை அரச அதிகாரம் உரு வாக்கி தன்னை இஸ்திரப்படுத்திக்கொள்ள முயல்கிறது.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலினை அடியொட்டி பார்க்கின்ற போது ஈழப் போராட்டம் எந்தளவு தூரம் வெற்றி பெறவில்லையென தமிழ் மக்கள் உட்பட அனைவரும் நம்புகிறார்களோ அதேபோல இத்தேர்தலும் தமிழ் மக்களை பொறிக்குள்ளே தள்ளிவிடும் ஒன்றாய் முன் நகர்த்தப்படுவதினை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஈழப்போராட்டம் தாக்குதல், போரியல் தொழில் நுட்பங்களினையும் தந்திர உபாயங்களினையும் கற்றுத் தேறியது போல தன் மக்களின் அன்றாட வாழ்வியலின் விருத்திக்காய் எதனைச் செய்துள்ளது? கல்வி அபிவிருத்தி தொடக்கம் அனைத்து வகையான பௌதீக மற்றும் உளவியல் அம்சங்களில் இந்தப் போராட்டம் எதனை வெற்றி பெறவும் திறன் விருத்திக்குமாய்ச் செய்துள்ளது? ஜனநாயகம் என்ற கோதாவில் புலிகளினை விட்டும் வெளியேறிய ஒரு சிறு குழுவினரை சிங்கள அரச பேரினவாதத்தின் கைபொம்மைகளாக செயற்பட வைத்ததுதான் இப்போராட்டம் இன்று செய்துள்ளதாகும்.

கருணா அம்மான் தொடக்கம் இன்றைய பிள்ளையான் வரை எவ்வளவு தூரம் தமிழரின் அரசியல் அபிலாசைகளிற்காய் தம் நிகழ்ச்சி நிரல்களினை தயார் செய்துள்ளனர் என்ற கேள்வியினை எழுப்பினால் பதில் பூச்சியம் தான் வருகிறது. தமிழரின் விடுதலை என்ற கோசங்களுடன்தான் இன்றைய சிங்கள அரசின் தமிழ் முகவர்கள் தங்களது போராட்டப் பயணத்தினை தொடங்கினர். சிங்கள ஆக்கிரமிப்பிற்கு எதிரான செயற்பாடுகளும் தாக்குதல்களும் செய்தவர்கள் இன்று எவ்வாறு அதே சிங்கள அரசின் துணைவர்களாக மாறினர்? தமிழர் போரியல் வரலாற்றில் ஏற்பட்ட தோல்விகளினை விட இந்த வழி தவறிய பின்னடைவும் சோரம் போனதும் மிகப் பெரிய ஆக்கிரமிப்பொன்றினை தமிழர்கள் மீது ஏற்படுத்திவிட்டது. இவ்வாறு கூறுவதற்கு ஆயுதப் போராட்டம்தான் தமிழர்கள் தங்களை காத்துக் கொள்ள ஒரே வழி எனறு கூற வில்லை. இங்கு டக்லஸ் தேவானந்தா வினை விட முகவர்களாக இவர்கள் செயற்படும் கேவலம் பற்றியே கதைக்கிறேன்.

ஏற்கனவே கூறியது போல புலிகள் மேற்கொண்ட வரலாற்றுத் தவறுகள் முஸ்லிம் -தமிழ் சிறுபான்மையினைங்களின் நல்லுறவில் ஏற்படுத்திய பாதிப்பினை இன்றுவரை நாம் அனுபவித்துக்கொண்டே வருகிறோம். ஏன் இந்தத் தவறு நடைபெற்றது? இது யாரின் சிந்தனை? வெளிநாட்டு சக்திகளிற்கும் முஸ்லிம்கள் மீதான புலிகளின் தொடர் வன்முறைக்கும் உள்ள தொடர்புகள் பற்றிய விவாதங்களை ஒரு புறம் வைப்போம். நடந்த தவறின் விளைவுகள் நமது பேரினவாத ஆக்கிரமிப்பாளர்களிற்கு எவ்வளவு சாதகமாகிவிட்டது என்பதைத்தான் கவனத்தில் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.

பிரித்தாளும் கொள்கையினை தன் காலனிய ஆக்கிரமிப்பு காலம் தொட்டு இன்று வரை மேற்குலகமும் ஆதிக்க சக்திகளும் எவ்வாறு பயன்படுத்தி வருகின்றதோ அதேபோல முஸ்லிம்-தமிழ் சமூகங்களினையும் இச் சமூகங்களிற்கு உள்ளேயும் சிங்களப் பேரினவாதிகள் இதனைக் கையாண்டு வந்துள்ளனர். இதற்கு நமக்கு முன்னே இருக்கும் மிக நெருங்கமான உதாரணம் தான் SLMCக்கு நடந்ததாகும். அஷ்ரஃபின் மரணத்தோடு அக் கட்சியினை பலபாகங்களாக உடைத்து

தன் இலாபத்திற்காய் சிங்களப் பேரினவாதிகள் பயன்படுத்திக் கொண்டிருப்பதினை நாமறிவோம். இது வரலாற்று தொடர்களில் எல்லாவகையான நிலைக் களன்களிலும் இடம் பெற்றே வந்திருக்கிறது என்று கூறி தப்பி விடுவது நியாமாகாது என நினைக்கிறேன். ஒரு கூட்டமைப்பு அல்லது ஒரு இணைவு ஏற்படுத்தும் போது அதற்குப் பாலமாக இருப்பவர்கள் முதன் முதலாக கரைந்து போகும் தன்மையினைக் கொண்டிருப்பர். அதன் பின் கூட்டமைப்புக்களிற்கு கிடைக்கும் அதிகாரங்களில் செல்வாக்குகள் ஒட்டுன்ணிகளையும் கரைந்து போபவர்களினையும் மிக இலகுவாக இனங்காட்டிவிடும். SLFP உடனான SLMC யின் கூட்டு இன்று பல ஒட்டுண்ணிகளை இனங் காட்டித் தந்துள்ளமையினை நாம் அறிகிறோம். இலங்கையின் அரசியல் வரலாற்றில் தனித்து இயங்க முடியாத SLFP இடதுசாரிகளினையும், UNP, JVP, SLMC போன்ற அரசியல் கட்சிகளை குழப்பி அதற்குள்ளிருந்து தனக்கு வேண்டிய வர்களினை கபளிகரம் செய்தே அரசியல் நடத்தியுள்ளதினை நாம் நன்கறிவோம். இன்று UPFA / SLFP /PA என்று முகம் கொண்ட இக்கூட்டமைப்பில் உள்ள முஸ்லிம் நபர்கள் SLMC இல் இருந்து வந்தவர்கள்தான். சிங்களப் பேரினவாதத்தின் செயற்பாடுகளினை அரசின் அதிகாரங்களுடன் இணைத்து செயற்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் கூட்டுக்குள் SLMC போராளிகள் என்று வளர்த்தவர்கள் எந்த இணக்கப்பாட்டுடன் கரைந்துள்ளார்கள் என்பதற்கான காரணங்களினை கிழக்கின் வீதிக்கதைகள் நன்கு தெளிவுபடுத்திக் கொண்டிருக்கின்றது. இவர்கள் விரும்பினாலும் அரசியல் வாழ்விலிருந்து ஓய்வு பெற முடியாதளவு பொறியினை சிங்களப் பேரினவாதிகள் இவர்களிற்கு போட்டுள்ளார்கள். இன்று இதே கேவலமான அரசியல் வழி நடாத்தல்களின் பின்னால் சிங்களப் பேரினவாதிகளின் கூட்டுக்குள் காவு கொள்ளப்பட்ட போராளிக் குழுதான் புலிகளிடமிருந்து பிரிந்த கருணா மற்றும் பிள்ளையான் அணிகளாகும். வெறும் சந்தர்ப்பவாத அரசியலை மாத்திரம் மேற்கொள்ள சிங்களப் பேரினவாதிகளின் தயார்படுத்தலாக இன்று தேர்தல் களத்தில் இவர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

ஜனநாயக தமிழ் அமைப்புக்கள் சுதந்திரமாக போட்டியிட முடியாதளவு பல்வேறு இறுக்கம் வாய்ந்த சூழலில் தேர்தல் அறிவிக்கப்பட்டு மிக வேகமான தயார்படுத்தல்களின் முடிவில் சிங்களப் பேரினவாதிகளின் கூட்டு களத்தில் நிற்கிறது. UNPயினதும் SLMCயினதும் கூட்டு ஒரு தேர்தல் வியூகம் என்ற கணீப்பீட்டில்தான் இன்று அனைவராலும் பார்க்கப்படுகிறது. ஆனால் தமிழ் மக்கள் இந்த தேர்தல் களத்தினை எவ்வாறு பார்க்கப்போகிறார்கள் என்பதுதான் இன்றுள்ள கேள்வி.

முஸ்லிம்களைப் பொறுத்தவரை நடந்து முடிந்த மட்டக்களப்பு உள்ளுராட்சித் தேர்தல் தெளிவான பார்வையினைத் தந்துள்ளது. உணர்சிகளால் வடிவமைக்கப்பட்ட அரசியல் போக்கினை முஸ்லிம் தேர்தல் களம் கொண்டிருந்தாலும் இன்று மக்களின் பார்வை SLMCயின் பக்கம் திரும்பி இருப்பதனை மறுப்பதற்கில்லை. முஸ்லிம் அமைச்சர்கள் உட்பட ஒரு பொரும்திரள் அரச பட்டாளமே கிழக்கில் படையெடுத்துக் கொண்டிருந்தாலும் தமிழர்களிற்கும் சேர்த்து நியாயமான உரிமைகளை வென்றெடுக்க சிங்கள இனவாதத்தின் கூட்டான UPFAயில் அறவே இடம் இல்லை என்பதினை அனைவரும் நன்கறிவோம். UPFAயில் முஸ்லிம் நபர்கள்/ அமைச்சர்கள் இணைந்து இருப்பதும், புத்தரின் வன்முறை வாரிசுகள் இணைந்து இருப்பதும், TMVP இணைந்து இருப்பதும் ஹிஸ்புல்லாஹ் போன்ற தனிமனிதர்கள் இணைந்து இருப்பதும் வெறும் சந்தர்பவாதமன்றி எந்த பொதுத் திட்டங்களின் கீழுமல்ல. இந்தக் குழு அடிக்கடி தனது முகத்திரையினை மாற்றிக் கொண்டே வந்திருப்பதினை நாம் தொடராக கண்டு வந்துள்ளோம். நான் குறிப்பிடும் இந்தக் குழு பற்றிய கிழக்கின் வீதிக்கதைகளை தற்போது நினைவுபடுத்திப் பாருங்கள். இவர்களின் முன்னால் சால்வைக் கம்பனியினர் எந்தெந்த விடயங்களினை முன்னிருத்தியுள்ளனர் என்பது தெளிவாகின்றதல்லவா? இவ்வாறு கூறுவதனால் SLMC+UNPகூட்டிணை தனிப்புனிதமா தாகவும் விடுதலைக்கான குழுவாகவும் நான் நியாயப்படுத்தி வக்காளத்து வாங்கு வதாய் பொருள் கொள்ள வேண்டாம். நம் உரிமைகளை பாதுகாத்துக் கொள்ளவும் சிங்களப் பேரின வாதத்தின் ஆக்கிரமிப்பினை பலமாக எதிர்த்து நிற்கவும் இந்த மாகாண சபையினை வென்றெடுப்பது மிக முக்கியமானதொன்று என நம்புகிறேன். அதற்காகத்தான் இந்த SLMC+UNPதேர்தல் வியூகத்தினை ஏற்றுள்ளது முஸ்லிம் சமூகம். இக்கால கட்டத்தினில் இவர்கள் அரசாங்கத்தின் நிகழ்ச்சித்திட்டத்தின் பின்னனியாய் சூரையாட நினைத்த முஸ்லிம் மாகாண சபையினையும் அதற்கான பொதுக் கட்டமைப்பு பொதுச்சின்னம் என்பதினையும் நினைத்துப் பாருங்கள். நிச்சயமாக நாம் முஸ்லிம் சமுகத்திற்காய் இயங்கப் போவதில்லை என்பதில் இவர்கள் உறுதியாக இருந்து கொண்டுதான் மஹிந்தவின் பேரினவாத முகாமினை காப்பாற்றிக் கொடுக்கவும் அதற்கான கூலியினைப் பெறவுமே பொதுச் சின்னம் பற்றிய பிரச்சினையில் கிடந்தனர் என்பது மிகத் தெளிவான விடயமாகும்.

மேலும், சிங்களப் பேரினவாதிகள் தாம் வெற்றி பெற்று முஸ்லிம் - தமிழ் இன ஆக்கிரமிப்பை அரசாங்கம் மற்றும் சம்பிக ரணவக்கயின் வழிகாட்டல்களின் கீழான அபிவிருத்தித் திட்டங்களினூடாக அடைய வேண்டுமாயின் கிழக்கு மாகாண சபையில் பலமான யாரும் இருக்கவே கூடாது என்ற சிந்தனையை முன்வைத்து தன்னுடனான போட்டிக் குழுவினை சிதைக்கும் தந்திர உபாயத்தினை மேற்கொண்டது. அதில் ஒன்றுதான் பொதுச்சின்னம் என்ற கோதாவினை அரங் கேற்றி முஸ்லிம் ஒற்றுமையினை அழித்துவிட முயன்றமையாகும். இன்னும் ஒருபடி சென்று தான் பார்ப்போம். பொதுச்சின்னம் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் கூட எந்த அரசியல் திட்டத்தின் கீழ் இம் முஸ்லிம் அரசியல் வாதிகள் இணைந் திருப்பார்கள் என்ற கேள்வி தோண்றுகிறதல்லவா?

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் சிங்கள பேரினவாதத்தின் கை ஓங்கிவிடக் கூடாது என்பதில் இரண்டு சிறுபான்மை இனங்களும் குறியாக இருக்கும் தருணம் இது. தமது செந்த கட்சி/இயக்க/குழு நிலை பெறவும், தொடர்ந்தும் ஆதிக்க வன்முறைச் சக்தியாக சிலர் செயற்பட நாம் இடமளிக்க முடியாது. நமது அரசியல் தலைவர்கள் என்று தங்களினை அடையாளப் படுத்தியிருக்கின்ற பலர் சிங்களப் பேரினவாதத்தின் பல்வேறு வகையான பொறிக்குள் சிக்குண்டவர்களாகவே இருக்கின்றனர். குறிப்பாய் இதனை அரசாங்கத்தின் கூட்டமைப்புக்குள் நன்கு அவதானிக்க முடியும். கிழக்கு விடுதலை, நமது மக்கள் என்றெல்லாம் கதையாடியவர் அதாவுல்லாஹ். இன்று பசில் ராஜபக்சவினது ஆலோசனையின் பேரில் போலியான ஐக்கியம் கதைப்பதைப் பார்த்து மக்கள் சிரித்துக்கொள்வதை அமைச்சர் அறிவாறோ தெரியாது. இந்த ஹிஸ்புல்லாஹ் கூறுகிறார் ஜனாதிபதி முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை பெற்றுத்தருவார் என்று. ஆனால்,பிள்ளயான் கூறுகின்றார் 15 மாகாணசபை உறுப்பினர்களுடன் தான் முதலமைச்சராக வரமுடியும் என்று. இவ்வகையான சிக்கல்களிற்குள்ளால்தான் ஆளும் தரப்பு இத்தேர்தலினை தனக்கேயான இனவாத கூச்சலுடன் அரங்கேற்றி முடிக்கும் தந்திர உபாயத்தினை மேற்கொள்கிறது. மத்திய அரசின் அதிகாரத்துடனான பேரினவாதத்தின் ஆதிக்கத்தினை தாங்க முடியாமல் இருக்கும் முஸ்லிம் - தமிழ் சிறுபான்மை இனங்களான நாம் கிழக்கு மாகாணத்தையும் தாரைவார்த்து விட்டு என்ன செய்யப்போகிறோம்?. UPFA கூட்டமைப்புக்குள் எந்தவித கருத்தியல் தளமும் இல்லை என்பதையும் சிங்கள பேரினவாதம் தான் கூட்டின் தளம் என்ற யதார்தத்தினை நமது அபிவிருத்திக்கும் தொழிலிற்குமாய் மறைக்க முற்படும் துரோகம் மிகப் பெரிய வரலாற்றுத் தவறில்லையா? வெற்றிலையை வெற்றிபெறச் செய்து அமைச்சுப் பதவிகளைத் தக்கவைத்தல் ஒரு நியாயமாகுமா? தனது 300 பேர் கொண்ட குழுவின் வன்முறை கலாசாரத்தினைப் பயன்படுத்தி தொடரான இன முறுகல் நிலையினைத் தக்கவைத்துக் கொள்ளுதல் நியாயமாகுமா?

தமிழ் சமூகம் மீதான வன்முறை அரசியலுக்கு பயந்து சிங்களத் தீவிரவாதத்தின் ஏவளாளிகளிடம் சரணடைவது கிழக்கினைப் பேரினவாதத்தின் கைக்குள் கொடுக்கும் திட்டமேயன்றி வேறெதுமில்லை. அதேநேரம் SLMC+UNPகூட்டு ஒன்றினை மனங்கொள்ளல் மிக அவசியமாகும். இந்தத் தேர்தலினை சிறுபான்மை மக்கள் சிங்களப் பேரினவாத ஆக்கிரமிப்பின் ஒரு செயற்பாடாகத்தான் கருதுகிறார்கள். அதனால்தான் பேரினவாதிகளின் பூரண திட்டங்களுடன் இயங்காத உங்களின் கூட்டமைப்பினை ஓரளவு சரிகாணும் நிலைக்கு வந்துள்ளனர். இதனை சிறுபான்மை மக்களின் குறிப்பாய் முஸ்லிம் மக்களின் பலவீனமாகக் கருதுவது மிகப் பெரிய தவறாகும். இங்கு பெரும்பான்மையாக வாழுகின்ற முஸ்லிம்,தமிழ் சமூகங்களின் நியாயபூர்வ உரிமைகளிற்கு இடம் கொடுக்காத எந்த அரசியல் சக்திகளையும் இம்மக்கள் ஏற்றுக்கொண்டதாக வரலாறுயில்லை. இனியும் இது இவ்வாறுதான் தொடரும் என்பதில் மாற்றுக் கருத்துக்களும் இல்லை. தமிழ் சமூகத்தினைப் பொறுத்தவரையில் புலிகளின் வன்முறை அரசியலின் பின்னர் இன்று அதே பாசிசப்புலிகள் கருணா அம்மான், பிள்ளையான் என்ற வடிவங்களில் அதே வன்முறையினை கையில் எடுத்திருக்கிறார்கள். தமிழ் மக்கள் இந்த வன்முறைக் கலாசாரத்திலிருந்து மீளவேண்டுமாயிருந்தால், அழிக்கப்பட்ட தமிழ் மக்களின் அனைத்து வகையான உரிமைகளினை மிக நியாயபூர்வமான அடிப்படையில் பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் சிங்களப் பேரினவாத்தின் அடிவருடிகளாகவும் தமிழ் சமூகத்தின் வரலாற்றுப் பாரம்பரியத்தினை மறுத்து விலை போனவர்களுமான இந்தக் கூலிக்கார எடுபிடியாளர்களை இத்தேர்தலில் விரட்டியடிக்க வேண்டிய தேவை இருக்கிறது.

கிழக்கு மாகாணம் இணைந்திருந்தாலும் பிரிந்திருந்தாலும் அது முஸ்லிம் அரசியல் நகர்வின் முக்கிய புள்ளியல்ல. தமிழ் மக்களின் நியாயபூர்வ உரிமைகளின் எதிரிகளாக முஸ்லிம் சமூகம் ஒருநாளும் இருக்கப் போவதில்லை. இணைந்த வடக்கு கிழக்கு என்றால் முஸ்லிம்களுக்கே உரிய தனியான நிருவாக அலகு அவசியம் என்பதுதான் எமது நிலைப்பாடாகும். இதனை தமிழ் சமூகத்தின் ஜனநாயக அரசியல் வரலாறும் ஐ.தே. கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனமும் ஏற்றுக் கொண்டேயிருக்கிறது. அல்லது கிழக்கு மாகாணம் தனித்த மாகாணம் என்றால் பெரும்பான்மை முஸ்லிம்களின் பக்கமிருந்து முதலமைச்சர் உட்பட ஆளும் தரப்பு அமைய வேண்டுமென்பதும் மிக நியாயபூர்வமான நிலைப்பாடுதான். ஆனால் ஐக்கிய தேசங்களாக இம்மக்கள் வாழ்வதற்கே விரும்புகின்றனர். வழமைபோல இந்தத் தேர்தலையும் கொந்தராத்து தேர்தலாக மாற்றிவிட மக்கள் தயாரில்லை என்பதினை அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ளல் வேண்டும். முஸ்லிம்- தமிழ் மக்களின் நியாயபூர்வ உரிமைகளை வென்றெடுத்து அருகிலுள்ள ஐக்கிய தேசங்களாக வாழ முடியுமே தவிர சிங்களப் பேரினவாதத்தின் அடிவருடிகளோடு இணைந்து சிங்கள ஆக்கிரமிப்பிற்குள் அழிந்து விட முடியாது என்பது மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கும் உண்மையாகும்.

இன்னுமொரு அலிஉதுமானையோ, வை. அஹமதையோ, ஒரு தொகை முஸ்லிம் இளைஞர்களையோ, ஹாஜிமார்களையோ எங்களுக்கே சொந்தமான பூர்வீக நிலங்களையோ அதனுடன் இணைந்து அரநாயக்காவில் இன்னொரு தலைவனையோ பலிகொடுத்து விட நாங்கள் யாரும் தயாரில்லை.


முஹம்மத் ஸன்பர்
நன்றி எழுவான்